சிறகு முளைத்த மனசு - கவிதை தொகுப்பு -பகுதி 2

1. வகுப்புக்கு வெளியே
    நீ வைத்த வேப்பஞ்செடி
    வாடிப்போகக்கூடாது என்பதற்காக
    உயிர்த்தியாகம் செய்த
    செடிகளின் எண்ணிக்கை
    தினம் ஒன்றாக
    பிடுங்கி நட்ட
    எனக்குத்தான் தெரியும்

2.  எல்லோருக்கும் கோபம்.
     7 ஸ்டார் கிரிக்கெட் அணியில்
    ஆடவே தெரியாத
    கண்ணனுக்கு நிரந்தர இடம்........
    நான் தலைவனாக
    இருக்கும் அணியில் விளையாட
    தேவதையின் தம்பி
    என்பதை விட என்ன
    தகுதி வேண்டும் அவனுக்கு.....!

3.  நீ
    இறைவணக்கப்பாடல் பாட
    போகிறாய் என்றதும்
    நான் வகுப்புத் தலைவனாகிவிட்டேன்.....
    அப்போது தானே எல்லோருக்கும்
    முன்னால் நின்று
     உன்னை நேருக்கு நேராக
    பார்க்க முடியும்...........
    நான் மட்டுமே தலைவனாக
    இருப்பதற்காக என்
    முதல் மதிப்பெண்ணை
    குமாருக்கு கையூட்டாக அளித்தது வேறு கதை...


4.  அடை மழைக்காலம்
    சுவரில்லாத நம் வகுப்பறையும்
    வெகுவாக ஈரமாகிப்போன தரையும்
    பொறுப்பிலாத நம் ஆசிரியர்களும்
    வசதியாக இருந்த ஆறும்
    நம் நட்பினை
    தொடங்கி வைத்தன
    தோள் பைகளில்
     மண் அள்ள போன இடத்தில்.........

5.  தொடந்து மூன்று முறை
     முதல் மதிப்பெண்
     எடுத்திருந்த நீ
     என்னிடம் வந்து கேட்டாய்
     "ஏன்டா என்ன ஆச்சு?
      ஏன் முதல் தரம் எடுக்கவில்லை?" என்று.....
      எப்படி சொல்வது
      என் கனவுகளில் நீ நிரந்தரம்
      ஆனது தான் காரணம் என்று......